துப்பாக்கிகள் தயாரித்த வழக்கில் என்.ஐ.ஏ அதிகாரிகள் இரண்டாவது நாளாக நேற்றும் விசாரணை செய்தார்கள்.
சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் அருகே இருக்கும் புளியம்பட்டி பகுதியில் சென்ற மே மாதம் போலீசார் வாகன சோதனை நடத்திய பொழுது இன்ஜினியர் சஞ்சய் பிரகாஷ், நவீன் சக்கரவர்த்தி உள்ளிட்ட இருவரிடம் இருந்து இரண்டு கை துப்பாக்கிகளை பறிமுதல் செய்தார்கள். மேலும் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தினார்கள். இதில் அவர்கள் ஏற்காடு அடிவாரம் கருங்காலி என்ற இடத்தில் வீடு வாடகைக்கு எடுத்து தயாரித்து வந்தது தெரிய வந்ததை தொடர்ந்து கபிலர் என்பவரையும் கைது செய்தார்கள்.
இந்த வழக்கு சேலம் கியூ பிரிவு போலீசார் விசாரணை செய்தனர். பின் என்.ஐ.ஏவுக்கு மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து என்.ஐ.ஏ இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான அதிகாரிகள் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து சேலம் வந்து ஓமலூர் காவல் நிலையத்திற்கு சென்று ஆவணங்களை வாங்கி விசாரணை செய்தார்கள். இந்நிலையில் நேற்று இரண்டாவது நாளாக விசாரணை மேற்கொண்டார்கள். மேலும் விரைவில் கைதானவர்களை நீதிமன்றம் மூலம் காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டு இருக்கின்றார்கள்.