அமெரிக்க நாட்டில் துப்பாக்கி கலாசாரம் அதிகரித்து வருகிறது. அந்த அடிப்படையில் அந்நாட்டின் டெக்சாஸ்மாகாணம் யுவால்டி நகரிலுள்ள ராப் ஆரம்பப் பள்ளிக்குள் சென்ற செவ்வாய்க்கிழமை துப்பாக்கியுடன் நுழைந்த 18 வயது இளைஞன் பள்ளிக்குழந்தைகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினான். இக்கொடூர துப்பாக்கிச்சூட்டில் 19 பள்ளி குழந்தைகள், 2 ஆசிரியைகள் உட்பட 21 பேர் இறந்தனர். அவ்வாறு துப்பாக்கிச்சூடு நடத்திய சல்வடொர் ரமொஸ் என்ற இளைஞனை காவல்துறையினர் சுட்டுவீழ்த்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களில் ஆரம்பப் பள்ளியில் 23 வருடங்களாக ஆசிரியையாக பணிபுரிந்து வந்த இர்மாஹர்சியா என்பவரும் அடங்கும்.
இதில் இர்மாவுக்கு 4 குழந்தைகள் இருக்கின்றன. இர்மாவின் கணவர் ஜோ ஹர்சிம்யா ஆவார். இர்மா-ஜோவுக்கு திருமணமாகி 24 வருடங்கள் ஆகிறது. இதனிடையில் ஆரம்பப்பள்ளி துப்பாக்கிச்சூட்டில் தன் மனைவி இர்மா ஹர்சிம்யா இறந்த செய்திகேட்டது முதல் அவரது கணவர் ஜோ ஹர்சிம்யா மிகுந்த மனஉளைச்சலில் இருந்து வந்தார். இந்த நிலையில் இர்மாவின் கணவர் ஜோவுக்கு நேற்று திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது ஜோவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பால் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக அறிவித்தனர். பள்ளி துப்பாக்கிச்சூட்டில் ஆசிரியையான தன் மனைவி இர்மா இறந்த நிலையில் அடுத்த 2 நாட்களில் அவரது கணவரான ஜோவும் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.