திருச்சிமாநகர கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் ரைபிள்கிளப் இயங்கி வருகிறது. இங்கு 47வது மாநில அளவிலான துப்பாக்கிசுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி பிஸ்டல் மற்றும் ரைபிள் துப்பாக்கி சுடுதல் பிரிவுகள் சென்ற 24-ஆம் தேதி முதல் துவங்கியது. இப்போட்டி வரும் 31ம் தேதி வரை நடைபெற இருகிறது. இவற்றில் தமிழகம் முழுதும் துப்பாக்கி சுடுதலில் பயிற்சிபெற்ற 1,300 போட்டியாளர்கள் பங்கேற்று இருக்கின்றனர். இதில் 10 மீட்டர், 25 மீட்டர், 50 மீட்டர் சுடுதளத்தில் பிஸ்டல் மற்றும் ரைபிள் துப்பாக்கிசுடுதல் போட்டிகளில் சிறியவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் என தரம்பிரிக்கப்பட்டு சப்-யூத் 16 வயது வரை, யூத் 19 வயது வரை, ஜூனியர் 21 வயது வரை, சீனியர் 21 முதல் 45 வயது வரை, மாஸ்டர் 45 முதல் 60 வயது வரை மற்றும் சீனியர் மாஸ்டர் 60 வயதுக்கு மேல் என தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திரைப்பட நடிகர் அஜித்குமார் துப்பாக்கிசுடுதல் போட்டியில் கலந்துகொள்வதற்காக திருச்சி வந்தார். அதன்படி நேற்று காலை அவர் கே.கே.நகரிலுள்ள ரைபிள் கிளப்பிற்கு சென்றார். அங்கு அவரை வரவேற்று போட்டியில் கலந்துகொள்ள வைத்தனர். 10 மீட்டர், 25 மீட்டர், 50 மீட்டர் போன்ற 3 பிரிவுகளிலும் அஜித்குமார் கலந்துகொண்டு இலக்கை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இவ்வாறு மாநில துப்பாக்கிசுடும் போட்டியில் கலந்துகொள்ள நடிகர் அஜித்குமார் திருச்சி வந்ததை அறிந்த அவரது ரசிகர்கள் நேற்று காலை கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் திரண்டனர். அதனை தொடர்ந்து அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.
ஒவ்வொரு சுற்றுப்போட்டியிலும் பங்கேற்றுவிட்டு அஜித்குமார் வெளியே வந்த போது, ரைபிள் கிளப் வெளியே குவிந்திருந்த ரசிகர்கள் உற்சாகத்துடன் ஆரவாரம் செய்தனர். அப்போது அவரும் ரசிகர்களை பார்த்து இரண்டு கட்டைவிரல்களை தூக்கி வெற்றி பெற்றது போன்ற சைகை செய்தார். இதனை பார்த்த ரசிகர்கள் உற்சாகத்துடன் அஜித்குமாரை செல்போன்களில் படம் பிடித்தனர். அத்துடன் ஒரு சில ரசிகர்கள் ஆர்வத்துடன் ரைபிள்கிளப்பில் போட்டி நடைபெறும் அரங்கிற்குள் நுழைந்தனர். இதன் காரணமாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவர்களை அப்புறப்படுத்த முயற்சி செய்தனர்.
இந்நிலையில் அஜித்குமாருடன் செல்பி எடுத்துகொள்ள போட்டி போட்டு முண்டியடித்ததால் அங்கு லேசான தள்ளு, முள்ளு ஏற்பட்டது. அதன்பின் காவல்துறையினர் அஜித்தை பாதுகாப்புடன் அழைத்து சென்று ஒரு அறையில் அமரவைத்தனர். சிறிது நேரத்திற்கு பின் அவர் வெளியே வந்து மீண்டும் அடுத்த சுற்று போட்டியில் கலந்துகொண்டார். திருச்சி மாவட்டத்தில் நடந்துவரும் துப்பாக்கிசுடுதல் போட்டியில் அஜித்குமார் பங்கேற்றுள்ள தகவலை அவரது ரசிகர்கள் வாட்ஸ்அப் வாயிலாக அனைத்து குழுக்களிலும் பரப்பி வருகின்றனர். இவ்வாறு திருச்சியில் நடந்து வரும் மாநில அளவிலான துப்பாக்கிசுடுதல் போட்டியில் தகுதி சுற்றுக்கு முன்னேறுவோர் தென்னிந்திய அளவிலான போட்டியில் கலந்துகொள்ள முடியும் என்று போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.