மத்திய பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது சிறுவனின் தலையில் குண்டு பாய்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பசுமலைப்பட்டி கிராமத்தில் போலீசார் துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் அமைந்துள்ளது. இங்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும் பயிற்சி மேற்கொள்வர். இந்நிலையில் பசுமலைப்பட்டி பகுதியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது ஒரு குண்டு 2 கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து சென்றுள்ளது. அந்த குண்டு நார்த்தாமலையில் இருக்கும் ஒரு குடிசை வீட்டின் வாசலில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்த சிறுவன் புகழேந்தி என்பவரது தலையின் இடது புறம் பாய்ந்ததால் சிறுவன் மயங்கி விழுந்துவிட்டார்.
இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தவர்கள் உடனடியாக சிறுவனை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதனையடுத்து சி.டி ஸ்கேன் எடுத்துப் பார்த்த போது மூளைக்கு அருகாமையில் குண்டு இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் சுமார் 4 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பிறகு மருத்துவ குழுவினர் சிறுவனின் தலையில் இருந்த குண்டை அகற்றிவிட்டனர்.
இந்நிலையில் சிறுவனின் உறவினர்கள் நார்த்தாமலை சாலையில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு துப்பாக்கி பசுமலை பட்டியில் சுடும் பயிற்சி மையம் செயல்படும் தற்காலிகமாக தடை விதித்துள்ளார்.