கதண்டுகள் கடித்ததால் படுகாயமடைந்த 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் உள்ள குழுமிகரை பகுதியில் விவசாயியான முத்துசாமி(67) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் இருக்கும் செடி, கொடி மற்றும் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்யும் பணி நடைபெற்றுள்ளது. அப்போது குப்பைகளை தீவைத்து எரித்துள்ளனர். இந்நிலையில் தீ எரிந்து கொண்டிருந்த போது திடீரென வந்த கதண்டுகள் முத்துசாமி, அவரது மனைவி லட்சுமி, மகன் சதீஷ், தனம், செம்பாயி, பொன்னர் ஆகிய 6 பேரையும் கதண்டுகள் துரத்தி கடித்தது.
இதில் படுகாயமடைந்த 6 பேருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் அருகில் உள்ளவர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவலறிந்த நங்கவரம் வருவாய் ஆய்வாளர் புவனேஸ்வரி, பேரூராட்சி செயல் அலுவலர் வேல்முருகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.