சென்னை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் அண்ணா நகரில் வசிக்கும் நந்தகுமார், பிரவீன், ராஜகோபால், நரேஷ், அனீஸ், ராஜன், காந்தி, சரீப் ஆகியோர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர். கடந்த 22-ஆம் தேதி 8 பேரும் சபரிமலைக்கு வேனில் சென்று கொண்டிருந்தனர். அந்த வேனை சுதாகர் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் சாமி தரிசனம் செய்துவிட்டு அதே வேனில் ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். நேற்று காலை 10 மணிக்கு கடலூர் மாவட்டத்தில் உள்ள ராமநத்தம் பகுதியில் சென்ற போது முன் பகுதியில் இருந்து கரும்புகை வந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த சுதாகர் வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு கீழே இறங்கி பார்த்தார். அப்போது என்ஜின் தீப்பிடித்து எரிந்ததால் உடனடியாக அனைவரையும் கீழே இறங்குமாறு கூறினார். சிறிது நேரத்தில் வேன் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது இது பற்றி அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று வேனில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் வேன் முழுவதும் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.