தமிழகத்தில் தேர்தலுக்கு முன்னர் அரசியலிலிருந்து விலகுவதாக சசிகலா அறிவித்தார். அவர் தற்போது அதிமுக நிர்வாகிகளுடன் பேசி அந்த ஆடியோக்களை வெளியிட்டு அதிமுகவினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறார். அவருடன் தொலைபேசியில் பேசிய 15 பேரை அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் நீக்கினார். இருந்தாலும் நிர்வாகிகளுடன் பேசுவதை சசிகலா நிறுத்தவில்லை.
இந்நிலையில் மதுரை திருப்பரங்குன்றம் அதிமுக ஒன்றிய அண்ணா தொழிற்சங்க செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான கே. லட்சுமிபதி ராஜன் சசிகலாவிற்கு ஆதரவாக மதுரை மாவட்டம் முழுவதிலும் போஸ்டர் ஒட்டி பரபரப்பை கிளப்பியுள்ளார். “துரோகத்தை வீழ்த்த வரும் தியாகமே சின்னம்மா” என்ற வாசகங்களுடன் மதுரை முழுவதிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.