கடலில் மாயமான மீனவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தேங்காய் பட்டினம் பகுதியில் மீனவர்கள் மீன் பிடிப்பதற்கு வசதியாக துறைமுகம் அமைக்கப்பட்டது. இந்த துறைமுகம் சரியான முறையில் கட்டப்படாததால் முகத்துவார பகுதியில் அடிக்கடி படகு கவிழ்ந்து விபத்து ஏற்படுகிறது. இந்த விபத்தில் சிக்கி கடந்த 4 வருடங்களில் 25-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பாக சைமன் என்ற மீனவர் முகத்துவார பகுதியில் படகு கவிழ்ந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதன் காரணமாக முகத்துவார பணியை சீரமைக்க வலியுறுத்தி மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின் அதிகாரிகள் நடத்திய பேச்சு வார்த்தைக்கு பிறகு மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலந்து சென்றனர்.
இந்நிலையில் மீண்டும் முகத்துவார பகுதியில் படகு கவிழ்ந்ததில் ஒரு மீனவர் மாயமாகியுள்ளார். அதாவது இனயம் பகுதியைச் சேர்ந்த அமல்ராஜ் என்ற மீனவர் நேற்று காலை மீன் பிடிப்பதற்காக கடலுக்கு சென்றார். இவர் மீன் பிடித்து விட்டு துறைமுகத்திற்கு திரும்பி வந்த போது திடீரென படகு கவிழ்ந்ததில் அமல்ராஜ் தண்ணீரில் விழுந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சக மீனவர்கள் அமல்ராஜை மீட்க முயற்சி செய்தும் அவரை மீட்க முடியவில்லை. இன்றும் அமல்ராஜை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், துறைமுக பகுதியில் உறவினர்கள் குவிந்துள்ளனர். மேலும் படகு விபத்தில் தொடர்ந்து மீனவர்கள் பலியாகும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.