Categories
உலகசெய்திகள்

“துல்லியமான வானிலை முன்னறிவிப்புகளை வழங்க முடியவில்லை”.. 2 பேரை பணிநீக்கம் செய்த அரசு…!!!!!

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஹங்கேரியில் ஒவ்வொரு வருடம் ஆகஸ்ட் 20ஆம் தேதி புனித ஸ்டீபன் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்டின் முதல் அரசு நிறுவப்பட்டதை கொண்டாடும் இந்த நாள் அங்கு தேசிய விடுமுறை தினமாகும். இதனால் புனித ஸ்டீபன் தினத்தில் நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் கலை கட்டுகின்றது. அதிலும் குறிப்பாக அன்றைய நாள் இரவு தலைநகர் புதா பெஸ்டில் உள்ள டுன்பே ஆற்றங்கரையில் நடத்தப்படும் கண்கவர் வேடிக்கை நிகழ்ச்சிகள் மிகவும் புகழ்பெற்றதாக விளங்குகிறது. இந்த சூழலில் கடந்த 20ஆம் தேதி புனித ஸ்டீபன் தினம் கொண்டாடப்பட்ட நிலையில் வான வேடிக்கை நிகழ்ச்சிகளை கண்டு கழிக்க ஆயிரக்கணக்கான மக்கள் தலைநகர் புதாபெஸ்டில் குவிந்துள்ளனர்.

ஆனால் நிகழ்ச்சி தொடங்குவதற்கு ஒரு சில மணி நேரங்களுக்கு முன்பாக புதாபெஸ்டில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக தேசிய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதனை தொடர்ந்து வானவேடிக்கை நிகழ்ச்சிகள் அனைத்தையும் அரசு ரத்து செய்துள்ளது. இதனால் வானவேடிக்கை நிகழ்ச்சிகளை காண காத்திருந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஆனால் வானிலை ஆய்வு மையம் அறிவித்தபடி புதா பெஸ்டில் மழை எதுவும் பெய்யவில்லை. இதனால் தேசிய வானிலை ஆய்வு மையத்தால் துல்லியமான வானிலை முன்னறிவிப்புகளை வழங்க முடியவில்லை என ஹங்கேரி மக்களிடையே எதிர்ப்புகளும் அதிருப்த்தியும் எழுந்துள்ளது‌. மேலும் தவறான முன்னறிவிப்புக்காக தேசிய வானிலை ஆய்வு மையம் சமூக ஊடகங்களில் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளது. இருந்தபோதிலும் இந்த விவகாரத்தில் வானிலை ஆய்வு மையத்தின் மூத்த வானிலை ஆய்வாளர்கள் இரண்டு பேரை அரசு பணி நீக்கம் செய்துள்ளது.

Categories

Tech |