கிணற்றுக்குள் தவறி விழுந்து ஜல்லிக்கட்டு காளை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கல்லுப்பட்டி கிராமத்தில் ராசு என்பவர் வசித்து வருகிறார். கடந்த 8 ஆண்டுகளாக இவர் சுறா என பெயரிடப்பட்ட ஜல்லிக்கட்டு காளை ஒன்றை வளர்த்து வந்துள்ளார். இந்த காளை பல்வேறு ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை பெற்றுள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் பகவதி அம்மன் கோவிலில் உழவர் திருநாளுக்கு அடுத்த நாள் பொங்கல் வைத்து ஆடு, மாடுகளுக்கு வழங்குவது வழக்கம்.
இதற்காக ராசு தனது காளையை மினி லாரியில் ஏற்றி பகவதி அம்மன் கோவிலுக்கு கொண்டு சென்றுள்ளார். இந்நிலையில் கோவிலுக்கு அருகில் இருக்கும் பகுதியில் வைத்து காளையை லாரியிலிருந்து இறக்க முயற்சி செய்த போது, துள்ளி குதித்து ஓடிய காளை அருகில் இருந்த விவசாய கிணற்றில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்துவிட்டது.
மேலும் பாறை மீது மோதி படுகாயமடைந்த காளை தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துவிட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காளையின் உடலை மீட்டனர். இதனையடுத்து இறந்த காளைக்கு பட்டு வேஷ்டி கட்டி, மாலை அணிவித்து கிராம மக்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர். அதன்பிறகு காளையின் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு அப்பகுதியில் இருக்கும் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.