தொழிலாளி தூக்கிட்டு கொள்வதாக கூச்சலிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாடுகளின் கால்களுக்கு லாடம் அடிக்கும் தொழில் செய்து வருகிறார். இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கையில் கயிறுடன் வந்தார். அதன்பின் அங்குள்ள ஒரு மரத்தில் தூக்குப் போட போவதாக திடீரென கோஷம் எழுப்பினார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த காவலர்கள் உடனடியாக முருகனின் கையில் இருந்த கயிறை வாங்கினர். அதன் பிறகு காவல்துறையினர் முருகனிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது முருகன் அன்னஞ்சி பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் கடந்த 7 வருடங்களுக்கு முன்பாக ரூபாய் 35 ஆயிரம் கடனாக வாங்கியதாகவும், கடன் வாங்கிய நபரின் மாடுகளுக்கு லாடம் அடித்து அதில் கிடைக்கும் கூலியை வட்டியாக செலுத்தி வந்ததாகவும் கூறினார். இதுவரை 40 ஆயிரம் ரூபாய் வரை செலுத்திய நிலையில், மேற்கொண்டு அந்த நபர் பணம் கேட்டு என்னை துன்புறுத்துகிறார். இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறினார். மேலும் காவல்துறையினர் முருகனை அல்லி நகர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.