சென்னை அயனாவரம் என்எம்கே தெருவில் வசித்து வந்தவர் விஜய் (24). இவரது தந்தை இறந்துவிட்டார். இதனால் விஜய் தனது தாய் மற்றும் தங்கையுடன் வசித்து வந்தார். இதில் விஜய் அதே தெருவிலுள்ள பிரபல மோட்டார்சைக்கிள் விற்பனை நிலையத்தின் சர்வீஸ் மையத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக விஜய் தான் பணிபுரிந்து வந்த கடையில் உதிரி பாகங்களை திருடி அதனை பல இடங்களில் விற்று வந்ததாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த கடையின் பொதுமேலாளர் திலீப் என்பவர் விஜய் மீது அயனாவரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்படி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனிடையில் போலீஸ் விசாரணைக்கு அஞ்சிய விஜய், நேற்று முன்தினம் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக தகவலறிந்து வந்த காவல்துறையினர் விஜய் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் அவரது வீட்டில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது தற்கொலை செய்வதற்கு முன் விஜய், தனது தாய்க்கு எழுதிய உருக்கமான கடிதம் ஒன்றை காவல்துறையினர் கைப்பற்றினர். அவற்றில் “நான் செய்த தவறுக்காக பொது மேலாளர் திலீப், அனைவருக்கும் முன் என்னை அடித்ததால் ஏற்பட்ட அவமானத்தில் நான் தற்கொலை செய்து கொள்கிறேன். அம்மா நீ எதற்காகவும் கலங்க வேண்டாம். மேலே சென்று அப்பாவுடன் சேர்ந்து உன்னை பார்த்துகொள்வேன்” என எழுதி இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.