கபடி வீராங்கனை தற்கொலை செய்து கொண்டதில் சந்தேகம் இருப்பதாக தந்தை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
சென்னை, மாங்காடு அருகில் மதனந்தபுரம் பஜனை கோவில் தெருவில் வசித்து வருபவர் தர்மராஜ்(25). இவர் காய்கறி வியாபாரியாக இருக்கின்றார். இவருடைய இளைய மகள் 25 வயதான பானுமதி முதுகலை பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். பானுமதி தேசிய, மாநில அளவிலான கபடி போட்டிகளில் கலந்துகொண்டு விளையாடி வந்துள்ளார்.
இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 22ஆம் தேதி நடைபெற்ற கபடி போட்டியில் கலந்து கொண்டு வீட்டுக்கு வந்த பானுமதி அறைக்குள் சென்றுள்ளார். பின் அறையில் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் வேலை கிடைக்காத காரணத்தினால் தற்கொலை செய்து கொண்டார் என்று தெரிவித்தனர். இந்நிலையில் பானுமதியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
அப்புகாரில் எனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது. எனவே பானுமதி விளையாடிய கபடி அணி நிர்வாகம், சக வீரர்கள், பயிற்சியாளர்கள் ஆகிய அனைவரையும் விசாரித்து தனது மகளின் தற்கொலைக்கு காரணமானவர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாங்காடு காவல்துறையினர் அந்த பெண்ணின் செல்போனை கைப்பற்றி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.