மகளைக் கல்லூரியில் சேர்ப்பதில் ஏற்பட்ட விவகாரத்தில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதைப் பார்த்து அவரது தந்தை மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டம், மலவள்ளி தாலுகா தளகவாடி கிராமத்தை சேர்ந்த ராஜூ என்பவரின் மகள் பந்தவ்யா. இவருக்கு சமீபத்தில் கல்லூரியில் அவரது தந்தை சேர்த்துவிட்டார். கல்லூரியில் சேர்க்கை விவகாரம் தொடர்பாக தந்தை-மகள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தியடைந்த நிலையில் நேற்று முன்தினம் தனது படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நேற்று காலை மகள் தூக்கில் தொங்குவதை பார்த்த அவரது தந்தை பந்தவ்யா உடலை கட்டி கொண்டு அழுதுள்ளார். இதையடுத்து திடீரென்று அவர் மயங்கி விழுந்துள்ளார். இதை பார்த்து அவரது குடும்பத்தினர் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். மகள் தூக்கில் தொங்கியதை பார்த்து, தந்தை மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.