மாவட்ட ஆட்சியர் வீட்டில் பணிபுரியும் கார் ஓட்டுநர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக ஸ்ரீகாந்த் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் தஞ்சையில் உள்ள அரசு அலுவலர்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு பங்களாவில் வசித்து வருகிறார். தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதால் தேர்தல் பணிக்காக இவரை தென்காசி மாவட்டத்திற்கு மாற்றியுள்ளனர். எனவே தேர்தல் பணிகளை பார்வையிடுவதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பாக இவர் தென்காசி மாவட்டத்திற்கு சென்றுள்ளார். இவரிடம் ராஜசேகர் என்பவர் கார் ஓட்டுனராக பணியாற்றி வந்துள்ளார். இவர் தஞ்சையில் உள்ள கூட்டுறவு காலனியில் வசித்து வந்துள்ளார். இவரை ஸ்ரீகாந்த் தன்னுடைய வீட்டின் மாடியில் உள்ள ஒரு அறையில் தங்க வைத்துள்ளார்.
இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ராஜசேகர் தன்னுடைய அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதைப் பார்த்த காவலாளி தஞ்சை தெற்கு நகர காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ராஜசேகரின் உடலை மீட்டு தஞ்சை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராஜசேகரன் தற்கொலை செய்து கொண்ட காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.