ரயில் தண்டவாளத்தில் கிடக்கும் குப்பைகளை தூய்மைபடுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டியிலிருந்து கல்லார் பகுதிக்கு செல்வதற்காக மலை இரயில் பாதை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அது வனப்பகுதி என்பதால் அங்கே காட்டு விலங்குகள் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் ரயிலில் பயணம் செய்யும் மக்கள் தாங்கள் பயன்படுத்திய பிளாஸ்டிக் குப்பைகள், உணவு பார்சல்கள், தண்ணீர் பாட்டில்கள் போன்ற ஏராளமான குப்பைகளை தண்டவாளத்தில் வீசுகின்றனர். இதன் காரணமாக அந்த பகுதியில் நடமாடும் வனவிலங்குகள் அந்த குப்பைகளை சாப்பிடுகின்றன. இதனால் வன விலங்குகளுக்கு பலவிதமான உடல் உபாதைகள் ஏற்படுகிறது.
எனவே இந்த குப்பைகளை சுத்தம் செய்யுமாறு மதுரை கிளை நீதிமன்றம் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின் அடிப்படையில் ஆர்.டி.ஓ துரைசாமி மற்றும் நகராட்சி ஆணையாளர் காந்திராஜ் தலைமையில் ஒரு குழு இந்த குப்பைகளை அகற்றும் பணியை செய்து வருகிறது. இது தவிர சில சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் சேர்ந்து இந்த குப்பைகளை அகற்றும் பணியை செய்கின்றனர். இந்த மலை ரயில் தண்டவாளத்தில் இருக்கும் குப்பைகளை 360 பேர் சுத்தம் செய்து வருகின்றனர். மேலும் வனவிலங்குகளின் நலன்களை கருத்தில் கொண்டு பொதுமக்கள் குப்பைகளை கொட்டுவதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் எஸ்.பி அம்ரித் கூறியுள்ளார்.