பாம்பன் தூக்குபாலத்தை கடக்க முயற்சி செய்த விசைப்படகு திடீரென பலத்தில் மோதி கடலில் மூழ்கியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் தூக்கு பாலத்தை கடந்து செல்வதற்காக மண்டபம் தெற்கு துறைமுக கடல் பகுதியிலிருந்து வந்த 10க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் வரிசையாக நின்று கொண்டிருந்துள்ளது. இந்நிலையில் தூக்கு பாலத்தை திறப்பதற்குள் மண்டபம் பகுதியை சேர்ந்த அஜ்மல் என்பவர் தனக்கு சொந்தமான விசைப்படகு மூலம் தூக்குப் பாலத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது படகின் மேல்பகுதி தூக்கு பாலத்தின் மீது மோதியுள்ளது. இதனையடுத்து அங்கிருந்த தூண் மீது மோதி படகின் மேல்பகுதி முழுவதும் சேதமடைந்த நிலையில் விசைப்படகு திடீரென கடலில் மூழ்க தொடங்கியுள்ளது.
இதனால் படகில் இருந்த 4 மீனவர்கள் உடனடியாக கடலில் குதித்துள்ளனர். இதனை பார்த்த தெற்குவாடி கடற்கரை பகுதியை சேர்ந்த மீனவர்கள் நாட்டுப்படகு மூலம் 4 மீனவர்களையும் பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த கடலோர காவல்துறையினர் மற்றும் ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் மீனவர்கள் பெரிய விசைப்படகு மற்றும் கப்பல்களில் மீன்பிடிக்க தூக்குபாலத்தை கடந்து செல்வதற்கு துறைமுக அதிகாரிகளிடம் முறையாக அனுமதி பெற வேண்டும்.
இதற்குப்பின் ரயில்வே பணியாளர்கள் தூக்கு பாலத்தை திறந்த பின்னரே விசைப்படகுகள் மற்றும் கப்பல்கள் தூக்குபாலத்தை கடந்து செல்ல வேண்டும். இந்நிலையில் மீனவர்கள் பெரும்பாலும் அஜாக்கிரதையாக தூக்குபாலம் திறக்கப்படுவதற்கு முன்னரே விசைப்படகுகள் மூலம் பாலத்தை கடந்து செல்கிறது. இதனால் மீனவர்களின் விசைப்படகு சேதமடைவதுடன் தூக்குபாலத்தின் தூண்களுக்கும் ஆபத்து ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே இதுபோன்ற செயல்களில் மீனவர்கள் ஈடுபட கூடாது என அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.