மதுரை மாவட்டத்திலுள்ள மேலமாசி வீதியில் பத்மநாபன் என்பவர் வசித்து வருகிறார். இவரது குடும்பத்தினர் மினி வேனில் கும்பகோணத்திற்கு சுற்றுலா சென்றுள்ளனர். அந்த வேனில் பத்து பெண்கள், சிறுவன் உட்பட 24 பேர் இருந்துள்ளனர். அங்கு சாமியை தரிசனம் செய்துவிட்டு பத்மநாபனின் குடும்பத்தினர் மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை மதுரை பாண்டிகோவில் ரிங் ரோடு அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த மினி வேன் தாறுமாறாக ஓடி சாலையில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் பெண்கள் உள்பட 16 பேர் படுகாயமடைந்தனர். இதுபற்றி அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயமடைந்த 16 பேரையும் மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் டிரைவர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் விபத்து நடந்தது தெரியவந்தது.