இரவில் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்திலுள்ள விருத்தாசலம் பகுதியில் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியரான சுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வம், செல்வகுமாரன் என்ற 2 மகன்கள் உள்ளனர். இதில் செல்வம் ரயில்வே ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு சாத்துகூடல் மேல்பாதி கிராமத்தில் 3 வீடுகள் உள்ளன. இந்நிலையில் செல்வகுமரன் ஒரு வீட்டிலும் சுந்தரம் மற்றொரு வீட்டிலும் இரவில் தூங்கியுள்ளனர். இதனையடுத்து இவர்கள் இருவரும் மறுநாள் காலை வீட்டில் இருந்து வெளியே வர முயற்சி செய்துள்ளனர். ஆனால் இவர்களது வீட்டின் முன்பக்க கதவு மற்றும் பின்பக்க கதவு பூட்டப்பட்டிருந்தது. இதனால் இவர்கள் இருவரும் தனித்தனியே அக்கம்பக்கத்தில் இருந்தவர்களுக்கு போன் மூலமாக தொடர்பு கொண்டு கதவை திறக்குமாறு கூறியுள்ளனர்.
இதன்பிறகு அவர்கள் 2 பேரும் மற்றொரு வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது அந்த வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதைகண்டு அதிர்ச்சியடைந்த செல்வகுமரன் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளார். அப்போது வீட்டின் இரும்பு பெட்டியில் இருந்த 20 பவுன் தங்க நகைகள் மற்றும் 1,30,000 ரூபாய் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து இவர்கள் கருவேப்பிலங்குறிச்சி காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தடவியல் நிபுணர்கள் அங்கு பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.