மருத்துவரின் வீட்டில் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஒட்டன்சத்திரம் பகுதியில் சக்திவேல்-ராணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் மருத்துவர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்களுடன் சக்திவேலின் பெற்றோர்களும் வசித்து வருகின்றனர். இவர்கள் நான்கு பேரும் உறங்கிக் கொண்டிருந்த போது இரவு நேரத்தில் மர்ம நபர்கள் சிலர் வீட்டிற்குள் புகுந்து அவர்களை கயிறால் கட்டிப் போட்டுவிட்டு பீரோவில் இருந்த 150 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து விட்டு காரில் அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளனர். இதுகுறித்து சக்திவேல் ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். இந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தடவியல் நிபுணர்கள் அங்கு பதிவான தடயங்களை சேகரித்துள்ளனர்.
இதனையடுத்து காவல் மோப்பநாய் அங்கு வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த மோப்பநாய் கொள்ளையர்கள் காரை நிறுத்தி விட்டுச் சென்ற இடத்தை கண்டறிந்து அங்கிருந்து ரயில்வே நிலையம் வரை சென்றுள்ளது. இதனால் கொள்ளையர்கள் ரயிலில் தப்பித்து சென்றிருக்கலாம் என தெரியப்படுகிறது. இவர்கள் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நகைகளை கொள்ளையடித்து சென்ற வடமாநில கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.