தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 6 பவுன் தங்க நகை பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கெடிலம் பகுதியில் செல்லத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவர் ரேஷன் கடையில் வேலை பார்த்து வருகிறார் இந்நிலையில் செல்லத்துரை தனது குடும்பத்துடன் இரவில் தூங்கிக் கொண்டிருக்கும் போது மர்ம நபர் ஒருவர் பின்பக்க கதவை உடைத்து வீட்டிற்குள் வந்துள்ளார். இதனையடுத்து அந்த மர்ம நபர் தூங்கிக்கொண்டிருந்த செல்லத்துரையின் மருமகள் சௌந்தர்யா கழுத்தில் இருந்த 6 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சௌந்தர்யா கூச்சலிட்டு அருகில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்து உள்ளார். ஆனால் அந்த மர்ம நபர் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார். இதுகுறித்து செல்லத்துரை திருநாவலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.