பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்திலுள்ள திட்டக்குடி பகுதியில் கரிகாலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேவி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் தேவியும், உறவினரான அனிஷா என்பவரும் இரவு நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் தேவியின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்தனர்.
இதனால் திடுக்கிட்டு எழுந்த தேவி சத்தம் போட்டுள்ளார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வருவதற்குள் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இது குறித்து தேவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நபர்களை தேடி வருகின்றனர்.