பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முழுக்கோடு அழகனாமூலை பகுதியில் விஜயன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அல்போன்சா(40) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்ட அல்போன்சா பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
இதனால் மன உளைச்சலில் இருந்த பெண் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் வீட்டில் அனைவரும் தூங்கிய பிறகு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். அதிகாலை கண்விழித்துப் பார்த்த விஜயன் தனது மனைவி தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.