கடலூர் மாவட்டத்தில் உள்ள சிறுவத்தூர் கிராமத்தில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது இவரது கூரை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. அந்த நேரம் காற்று பலமாக வீசியதால் அருகில் இருந்த மங்களலட்சுமி முத்துலட்சுமி ஆகியோரின் வீடுகளுக்கும் தீ வேகமாக பரவியது. இதனால் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் அலறியடித்து கொண்டு வெளியே ஓடி வந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இது பற்றி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் வீடுகளில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் வீட்டிலிருந்த ஐந்து லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.