கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள காயல்பட்டணம் பகுதியில் மீராசாகிப் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார் ஓட்டுநரான பீர் முகமது(34) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் பீர்முகமது பாலக்காட்டில் பயணிகளை இறக்கி விட்டு மீண்டும் காயல்பட்டினம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இவர் மதுரை-தூத்துக்குடி நான்கு வழி சாலையில் கஞ்சநாயக்கன்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தபோது தூக்கம் வந்ததால் காரை ஓரமாக நிறுத்திவிட்டு தூங்கியுள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக காரில் இருந்து புகை வெளியேறி தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்ததும் பீர்முகமது உடனடியாக காரில் இருந்து கீழே இறங்கி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு காரின் பற்றி எரிந்த தீயை அணைத்து விட்டனர். ஆனால் இந்த தீ விபத்தில் கார் முழுவதுமாக எரிந்து நாசமானது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.