போக்சோ சட்டத்தில் கைதான தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 10 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வீட்டில் தூங்கி கொண்டிருந்த சிறுமிக்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் கூலி தொழிலாளியான அசோகன்(58) என்பவர் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்து அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிந்த போலீசார் அசோகனை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த ஈரோடு மகளிர் நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட அசோகனுக்கு 4000 ரூபாய் அபராதமும், 5 வருடங்கள் ஜெயில் தண்டனையும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டது. மேலும் தமிழக அரசு பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு லட்ச ரூபாய் நிவாரண தொகை வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.