தூத்துக்குடியில் ஆட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளி பெண் அரசு வேலை வழங்கக்கோரி திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திங்கட்கிழமை நடைபெற்றது. இதற்கு ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமை தாங்க கூடுதல் ஆட்சியர் சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், மகளிர் திட்ட இயக்குனர் வீரபத்திரன் உள்ளிட்டோர் முன்னிலை வசித்தார்கள். பின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மனுக்கொடுத்தார்கள்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முடிவைத்தானேந்தல் அருகே இருக்கும் கீழவாகைகுளத்தை சேர்ந்த வள்ளியம்மாள் என்ற மாற்றுத்திறனாளி பெண் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த நிலையில் அங்கு திடீரென தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கு பணியில் இருந்த போலீசார் அந்த பெண்ணிடம் பேச்சு வார்த்தை நடத்தி பின் ஆட்சியரிடம் மனு கொடுக்க அழைத்துச் சென்றார்கள்.
அந்த மனதில் அவர் கூறியதாவது, சென்ற செப்டம்பர் 8ஆம் தேதி அன்று தமிழக முதல்வரிடம் வேலை வழங்கக்கோரி மனுக்கொடுத்தேன். அந்த மனு மீது நடவடிக்கை எடுத்து பணி வழங்க முதல்வர் அறிவுறுத்தினார். ஆனால் இதுவரை மாவட்ட நிர்வாகம் எனக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகையால் எனக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் எனது ஆவணங்களை ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்க இருக்கின்றேன் என கூறியிருக்கின்றார்.