தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கிவரும் வேதாந்தா நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் தாமிர ஆலையை மூடக் கோரி சென்ற 2018 ஆம் வருடம் தூத்துக்குடி சாத்தான்குளம் கிராமத்தை சேர்ந்த மக்கள் மட்டுமின்றி, பல சமூகஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களும் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பல முறை கோரிக்கை விடுக்கப்பட்டும், நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தால் தான் மக்கள் போராட்ட முடிவை எடுத்ததாக கூறப்பட்டது.
அதன்பின் காவல்துறை போராட்டத்தை கைவிட பல முறை எச்சரித்தும், பொதுமக்கள் கேட்காததால் அங்கு துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது. அவ்வாறு காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிசூட்டில் 13 பேர் இறந்தனர். இச்சம்பவம் மொத்த நாட்டையும் உலுக்கியது. அதனை தொடர்ந்து தூத்துக்குடி துப்பாக்கிசூட்டில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு சார்பாக 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது.
இந்த நிலையில் சென்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் இந்த 13 பேரின் குடும்பத்துக்கும் கூடுதல் இழப்பீடு அளிக்க இருப்பதாக உறுதியளித்தார். அந்த வகையில் தற்போது முதல்வரின் பொதுநிவாரண நிதியிலிருந்து தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்த 13 பேரின் குடும்பத்துக்கும் ஏற்கனவே வழங்கப்பட்ட ரூ.5 லட்சம் தொகையுடன் தற்போது கூடுதலாக ரூ. 5 லட்சம் வழங்க முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.