தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்களுக்கும் ரத்த அழுத்த பரிசோதனை கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் ரத்த அழுத்தம், சிறுநீரக நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம் மற்றும் இரத்த அழுத்த பரிசோதனை கருவிகளை அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை நிறுவனர் ஷாஜி ஆபிரகாம் தலைமை தாங்க தூத்துக்குடி சிறுநீரகவியல் டாக்டர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினார்கள். இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பங்கேற்றார்.
அப்போது அவர் பேசியதாவது, போலீஸாருக்கு உடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் நாமும் நமது குடும்பத்தாரும் சந்தோஷமாக இருக்க முடியும். பணம் பதவியை விட முக்கியமானது உடல் ஆரோக்கியம் தான். தினமும் உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள். எண்ணங்கள் வலிமையானது. நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொண்டு உங்களால் முடிந்த அளவு பொதுமக்களுக்கு நன்மையை செய்து பிறரை மகிழ்ச்சியாக வைத்துக் கொண்டு நீங்களும் மகிழ்ச்சியாக இருங்கள் என கூறியுள்ளார்.