தூய்மைப் பணியாளர் நல வாரியத்தில் உறுப்பினராக சேர விண்ணப்பங்கள் கொடுக்கப்படுகிறது என்று கலெக்டர் அறிவித்துள்ளார்.
நாகை மாவட்டத்தில் தூய்மைப் பணியாளர் நல வாரியத்தில் தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவோர் உறுப்பினராக விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் அருண் தம்புராஜ் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசியதாவது, தூய்மை பணியாளர் நல வாரியத்தில் உறுப்பினராக சேர விண்ணப்பங்கள் அந்தந்தப் பகுதியிலுள்ள நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி அலுவலகங்களில் கொடுக்கப்படுகிறது.
தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் பணியாளர்கள் இந்த விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உரிய அலுவலரிடம் கையொப்பம் பெற்று அதனுடன் சாதி சான்று நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் எல்லாவற்றையும் இணைத்து நாகை மாவட்ட அலுவலக வளாகத்திலுள்ள தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
மேலும் தூய்மை பணியாளர் நல வாரியத்தில் உறுப்பினராக சேர்ந்து அடையாள அட்டை எண்ணை பெற்றுள்ள பணியாளர்களின் குழந்தைகளுக்கு புதிய அரசாணையின்படி திருமண உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, முதியோர் ஓய்வூதியம், மகப்பேறு உதவித்தொகை, ஈமச்சடங்கு உதவித்தொகை, இயற்கை மரணம் உதவித்தொகை உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளும் கொடுக்கப்பட உள்ளது,
இது தொடர்பாக மற்ற விபரங்களை தெரிந்து கொள்வதற்கு தட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்திற்கு நேரில் சென்று அல்லது 04365-250305 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.