தமிழ்நாட்டில் மொத்தம் 21 மாநகராட்சிகள் இருக்கிறது. இதில் சென்னை மாநகராட்சியை தவிர மற்ற மாநகராட்சிகளில் கடந்த 1996-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட தமிழ்நாடு மாநகராட்சி பணி விதிகள் நடைமுறையில் இருக்கிறது. இதில் பல்வேறு விதமான முரண்பாடுகள் காணப்படுவதால் மக்கள் தொகைக்கு ஏற்ப மாநகராட்சிகளை வகைப்படுத்தி பணியிடங்களை உருவாக்குகின்றனர். இந்நிலையில் தமிழக நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு பணியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில் ஒவ்வொரு மாநகராட்சியும் மொத்தம் 4 பிரிவில் செயல்படும். அதன்படி பொது சுகாதார பிரிவு, பொறியியல் மற்றும் குடிநீர் வழங்கள் பிரிவு, வருவாய் மற்றும் கணக்கு பிரிவு, பணியாளர் பிரிவு என 4 பிரிவுகளாக செயல்படும். இதில் கோவை மற்றும் மதுரை மாநகராட்சியில் மக்கள் தொகையானது 10 லட்சத்திற்கும் மேல் இருக்கிறது. இதனால் 402 பணியிடங்கள் கேட்கப்பட்டது. ஆனால் 302 பணியிடங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒரு வார்டுக்கு 1 வீதம் 100 வரி வசூலர் மற்றும் சட்ட ஆலோசகர் பணியிடங்கள் நீக்கப்பட்டுள்ளது.
அதன் பிறகு 4 மண்டலங்களாக செயல்படும் மற்ற மாநகராட்சிகளுக்கு குறைவான எண்ணிக்கையிலேயே பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வரிவசூலர், பதிவுத்துறை எழுத்தர், தட்டச்சர், தரவு உள்ளீட்டாளர், இரவு காவலர்கள், அலுவலக உதவியாளர்கள், செயல்திறனற்ற மற்றும் செயல் திறன் பணியாளர்கள், துப்புரவு மேற்பார்வையாளர்கள், தூய்மை பணியாளர்கள் என நிரந்தர பணியில் இருப்பவர்களுக்கு மாநகராட்சி நிதியிலிருந்து ஊதியம் வழங்கப்படும்.
இதைத்தொடர்ந்து ஓய்வுக்கு பிறகு பணியிடங்களை நிரப்பாமல், வெளிமுகமை வாயிலாக மேற்கொள்வதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதோடு அரசாணையில் குறிப்பிடப்படாத ஏதேனும் பணியிடங்கள் இருப்பின் அவர்கள் ஓய்வு வரை பணியாற்றிக் கொள்ளலாம். ஆனால் அதற்குப் பிறகு அந்த பணியிடங்களை நிரப்பக் கூடாது. மேலும் ஏற்கனவே 10 வருடங்களுக்கு மேலாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் பணியாளர்கள் நிரந்தரம் கேட்டு போராடி வரும் நிலையில் பணி நிரந்தரம் கிடையாது என்ற உத்தரவு தற்போது தொழிலாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.