தென்காசியில் கலெக்டர் அலுவலகம் முன்பு கிராம மக்கள் தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் தென்காசி மாவட்ட கலெக்டர் கோபால சுந்தர்ராஜ் தலைமை தாங்கினார். அப்போது மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வந்த வேலாயுதபுரம் கிராம மக்கள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் ஒரு மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருந்ததாவது, வாசுதேவநல்லூர் பகுதியில் உள்ள வேலாயுதபுரம் கிராமத்தில் கடந்த நவம்பர் 3ஆம் தேதி ரேஷன் கடைக்கு சென்ற ஆரோக்கியம் என்பவரின் மனைவி மனோன்மணியை அதே பகுதியைச் சேர்ந்த இன்னாசி என்பவரின் மகன் கிறிஸ்டோபர் வெட்டிக்கொலை செய்துள்ளார். அதுமட்டுமன்றி அவர் கருப்பசாமி மற்றும் சூர்யா என்ற மேலும் இருவரையும் வெட்டியுள்ளார்.
இதுகுறித்து வாசுதேவநல்லூர் காவல் நிலையத்தில் கிறிஸ்டோபர் மீது புகார் அளிக்கப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் வெளியில் வந்து இன்னும் மூன்று பேரை வெட்ட போவதாக கூறியுள்ளதால் கிராம மக்கள் மிகவும் அச்சத்திலும் பயத்திலும் இருப்பதாக கூறியுள்ளனர். இதனால் கிறிஸ்டோபர் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட முடியாத அளவில் சட்டப் பிரிவுகளின் கீழ் அவரை சிறையில் அடைக்க வேண்டும். என கிராம மக்கள் அந்த மனுவில் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் இந்து முன்னணி சார்பில் ஒரு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் கடையநல்லூர் தாலுகா பொய்கை கிராமத்தில் ஒரு சாலை ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதாகவும் அதனை மீட்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒரு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் கூறியிருந்ததாவது, தென்காசி வாலியன் பொத்தை பகுதியிலுள்ள 150 குடும்பங்களுக்கு உள்ளாட்சி மற்றும் எம்எல்ஏ நிதி போன்றவற்றின் மூலம் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. ஆனால் அதில் இருந்து 30 கிலோ மீட்டருக்கு அப்பால் வசிக்கும் நரிக்குறவ இன மக்களுக்கு எந்த வசதியும் செய்யப்படவில்லை. அவர்களுக்கும் அனைத்து வசதிகளும் செய்து தரப்பட வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.