கொலை வழக்கில் கைதான குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆலங்குளத்தில் தொழிலதிபரான கருப்பசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டிடத் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கும் பிரபு, வைத்திலிங்கம், ராஜ்முருகன், அருள் பெருமாள், ராஜசேகரன், முத்துராஜ், செல்வராஜ், சுரேஷ், ராஜ் ஆகிய 9 பேருக்கும் தொழில் ரீதியாக முன்விரோதம் இருந்துள்ளது. இவர்கள் 9 பேரும் ஆற்று மணல் விற்பனை செய்து வந்தார்கள். இந்நிலையில் திடீரென சுரேஷின் மணல் லாரியை காவல்துறையினர் விசாரணை செய்துள்ளனர். இதற்கு கருப்பசாமி தான் காரணம் என்று 9 பேரும் நினைத்துள்ளனர்.
இதன் காரணமாக கடந்த 2012-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் புதுப்பட்டி சாலையில் வைத்து கருப்பசாமியை 9 பேரும் சேர்ந்து அரிவாளால் சரமாரியாக வெட்டி கொடூரமான முறையில் கொலை செய்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 9 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குற்றவாளிகள் 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும் குற்றவாளிகளில் ஒருவர் சிறுவர் என்பதால் அவர் வழக்கு சிறார் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அதன் பிறகு குற்றவாளிகளில் ஒருவர் ஏற்கனவே இறந்துவிட்டார்.