Categories
அரசியல் தென்காசி மாவட்ட செய்திகள்

தென்காசி சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள், கோரிக்கைகள் என்ன ?

மதுரையை ஆண்ட பராக்கிரம பாண்டிய மன்னர் காசிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டபோது 12ஆம் நூற்றாண்டில் உருவாக்கிய நகரமே தென்காசி ஆனதாக கூறப்படுகிறது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் குற்றால அருவிகள் இப்பகுதிக்கு அழகு சேர்க்கின்றன. தென்காசி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி 6 முறை வெற்றி பெற்றுள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் சுயேட்சை வேட்பாளர் 1 முறை வெற்றி பெற்றுள்ளனர். அதிமுக 4 முறையும், திமுக 2 முறையும் தொகுதியை கைப்பற்றியுள்ளனர்.

தற்போதய எம்எல்ஏ அதிமுகவின் செல்வமோகன்தாஸ் பாண்டியன். தென்காசியில் மொத்தம் 2,91,524 வாக்காளர்கள் உள்ளனர். தென்காசி தொகுதியில் விவசாயம் பிரதானமாக உள்ளது. பிற தொழிற்சாலைகள் எதுவும் இல்லாததால் படித்த இளைஞர்கள் வேலை தேடி பிற மாநிலங்களுக்கு, பிற மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளதாக மக்கள் கூறுகின்றனர். சாலைகளை சீரமைக்க வேண்டும் என்றும், போக்குவரத்து நெரிசலை குறைக்க புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான குற்றாலத்தை தரமாக பேணிப் பராமரிக்க வேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்துகின்றனர். கொட்டும் அருவிகள் இருந்தாலும் தென்காசி, மேலகரம் உள்ளிட்ட பல பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளதாக புகார் எழுந்துள்ளது. தொழில் வளர்ச்சியோ, அடிப்படை வசதிகளோ இல்லை என்பது முக்கிய குற்றச்சாட்டாக உள்ளது. வணிக பகுதியான சுரண்டையை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்றும் மக்கள் கூறுகின்றனர்.

அரசு அலுவலகங்களுக்கு தென்காசி செல்ல வேண்டிய நிலை உள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் தரத்தை உயர்த்த வேண்டும் என்றும் மக்கள் கூறுகின்றனர். இயற்கை எழில் கொஞ்சும் குற்றாலம் சுற்றுவட்டாரத்தில் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு சுற்றுலாவை மேம்படுத்தினால், ஊருக்கு புகழ் சேர்வதுடன் ஏராளமானோருக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும் என்கிறார்கள் தென்காசி வாக்காளர்கள்.

Categories

Tech |