தென்கொரியா அதிபரிடமும் நாட்டு மக்களிடமும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் மன்னிப்பு கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
வட கொரியாவிற்கும் தென்கொரியாவிற்கும் இடையில் 1950 ஆம் ஆண்டுக்குப் பிறகு இணக்கமான உறவு ஏதுமில்லை. இரண்டு நாடுகளுக்கிடையே போர் மூளும் சூழல் தான் இருந்து வந்தது. அதன் பிறகு 2018 ஆம் ஆண்டு நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியை தொடர்ந்து இரு நாடுகள் இடையே இருந்த பனிப்போர் விலகி சுமுகமான உறவு மேம்பட்டது. அதே வருடம் இரண்டு நாட்டு அதிபர்களும் எல்லையில் சந்தித்து பேசி ஒப்பந்தம் செய்து கொண்டனர். ஆனால் சமீப காலமாக இரு நாடுகள் இடையே இருந்த நல்லுறவில் விரிசல் விழுந்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் தென் கொரியா, வட கொரியாவின் தலைமைக்கு எதிராக விமர்சனங்களை தெரிவித்து துண்டுப்பிரசுரங்கள் நிரப்பப்பட்ட பலூன்களை அனுப்பி தென்கொரியா மோதலில் ஈடுபட்டு வந்தது. இந்நிலையில் வட கொரியா எல்லையில் இருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் அமையப்பெற்றுள்ள தீவின் அருகே தென் கொரியாவின் மீன்வளத்துறை அதிகாரி ஒருவர் ரோந்து பணியில் படகில் சுற்றி வந்தார். ஆனால் திடீரென அவர் காணாமல் போனார். அவர் இருந்த படகில் அவரது ஷூக்களை விட்டுச் சென்றிருந்தது தெரியவந்தது.
அதோடு அவர் வட கொரியாவுக்குள் செல்ல முயன்று இருக்கலாம் என கூறப்பட்டது. இதனிடையே திங்கள்கிழமை மாயமான அவர் செவ்வாயன்று வடகொரியாவின் கடல் பகுதியில் தென்பட்டுள்ளார். ஆனால் வட கொரியா நாட்டு துருப்புக்கள் அவரை விசாரித்து சுட்டுக் கொன்றனர். அதோடு அவரது உடலை எரிக்கவும் செய்தனர். இதனை உறுதி செய்த தென்கொரிய ராணுவம் வடகொரியாவின் செயல் மிருகத்தனமான என கண்டனம் தெரிவித்தது.
மேலும் இத்தகைய சம்பவத்திற்கு விளக்கம் அளிப்பதோடு இதற்கு காரணமாக இருந்தவர்களை தண்டிக்க வேண்டும் என தென் கொரியா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இந்நிலையில் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் தென்கொரியாவை சேர்ந்த வீரர் கொலை செய்யப்பட்டதற்கு மன்னிப்பு கேட்டதாக தென்கொரியா கூறியுள்ளது. தென் கொரியா நாட்டு அதிபரிடம் மற்றும் அந்நாட்டு மக்களிடம் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் மன்னிப்பு கேட்டதாக தென் கொரியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கூறியுள்ளார்.