வடகொரியா அணு ஆயுத சோதனை, ஏவுகணை சோதனை போன்றவற்றை நடத்தி உலக நாடுகளை எப்போதும் பரபரப்பாகவே வைத்துள்ளது. அதிலும் குறிப்பாக தென்கொரியா, ஜப்பான், அமெரிக்காவிற்கு எதிராக வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் வடகொரியா நேற்று அணு ஆயுதத்தை சுமந்து செல்லும் வல்லமை கொண்ட ஏவுகணையை சோதனை செய்து இருக்கின்றது. வடகொரியாவில் இருந்து ஏவப்பட்ட அந்த ஏவுகணை ஜப்பானின் வான் பரப்பை கடந்து சென்று பசுபிக் கடலில் விழுந்திருக்கின்றது மேலும் இந்த ஏவுகணை ஆயிரம் கிலோமீட்டர் உயரத்திற்கு பறந்து இருக்கின்றது எனவும் அது சர்வதேச விண்வெளி மையம் அமைந்துள்ள உயரத்தை விட அதிகம் எனவும் கூறப்பட்டிருக்கிறது.
வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனை தொடர்ந்து தென்கொரியா மற்றும் ஜப்பான் பாதுகாப்பு படையினர் உஷார் படுத்தப்பட்டு இருக்கின்றனர். இந்த சூழலில் வடகொரியாவிற்கு பதிலடி தரும் விதமாக அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா இன்று ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. இந்த சோதனையில் அமெரிக்க ராணுவம் தங்களுக்கு சொந்தமான 4 ஏவுகணைகள் ஏவி சோதனை மேற்கொண்டுள்ளது. அதே சமயம் தென்கொரிய ராணுவமும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு ஏவுகணைகளை ஏவி சோதனை மேற்கொண்டுள்ளது.
இதில் தென் கொரியா ஏவிய ஒரு ஏவுகணை தோல்வியடைந்துள்ளது. இதனை அடுத்து அந்த ஏவுகணை வடகொரியாவின் கடற்கரை நகரமான கங்க்னியங்க் என்னும் பகுதியில் உள்ள விமானப்படைத்தளத்தில் விழுந்து வெடித்துள்ளது. இந்த நிலையில் ஏவுகணை விழுந்து வெடித்ததில் விமானப்படை தளத்தில் தீ பற்றி எரிந்துள்ளது. இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவலில் வெளியாகி இருக்கிறது. மேலும் வட கொரியாவிற்கு எதிரான தென்கொரியா நடத்திய ஏவுகணை சோதனை சொந்த நாட்டு விமானப்படை தளத்திற்குள் விழுந்ததால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.