சென்னை மியாட் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள மறுவாழ்வு மையத்தை காணொலி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.
கொரோனாவின் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து குணமடைந்தாலும் அதன் எதிர்விளைவுகளால் பாதிப்புக்குள்ளாகின்றன. எனவே இவ்வாறு எதிர் விளைவுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை மியாட் மருத்துவமனையில் பிரத்யேக மறுவாழ்வு மையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த மறுவாழ்வு மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை அன்று சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடியே காணொலி மூலம் தொடங்கி வைத்துள்ளார்.
மேலும் அதன் செயல்பாடுகள் தொழில்நுட்ப வசதிகள் குறித்து மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் பிரத்வி மோகன்தாஸிடம் கேட்டு அறிந்துள்ளார். இதனிடையே மியாட் மருத்துவமனையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம், ஊரகத் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் இந்த மறுவாழ்வு மையத்தை நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.
மேலும் இது குறித்து பேசிய டாக்டர் பற்றி பிரித்வி மோகன்தாஸ், இதுவரை 12,000-க்கும் மேற்பட்டோரை கொரோனா தொற்று காலத்தில், இந்த பிரத்யேக சிகிச்சை பிரிவில் வைத்து குணப்படுத்தியுள்ளதாக கூறினார். மேலும் இந்த கொரோனா தொற்று 80% பேருக்கு லேசான பாதிப்பும், 15 சதவீதம் பேருக்கு தீவிர அறிகுறிகளும் ஏற்படுவதாக கூறினார். அதிலும் 5% பேர் கடுமையான பாதிப்புக்குள்ளாகி தீவிர சிகிச்சைக்கு உட்படுவதாக கூறியுள்ளார்.
இதனால் கொரோனாவின் கடுமையான நோய் தாக்கத்திற்கு உள்ளாகும் நபர்கள் அதிலிருந்து குணமடைந்தாலும் , அதனால் ஏற்பட்ட எதிர்விளைவுகளை சந்திக்க வேண்டிய நிலை உருவாகிறது. குறிப்பாக நுரையீரல் சேதம், நரம்பு பிரச்சினைகள், இதயம், கல்லீரல், சிறுநீரக பாதிப்புகள் அதிகமாக ஏற்படுகின்றன.இதனால் இவர்களது இயல்பு வாழ்க்கை பாதிக்கும் நிலையில் அதை கருத்தில்கொண்டு அத்தகைய நோயாளிகளுக்காக இந்த மறுவாழ்வு மையத்தை தொடங்கியுள்ளோம். தென்னிந்தியாவில் இப்படி ஒரு சிறப்பு மையம் அமைக்கப்படுவது இதுவே முதல் முறை என்று தெரிவித்துள்ளார்.