தென்னை மரம் ஏறுபவர்கள் மற்றும் பதநீர் இறக்குவோர் அனைவருக்கும் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான கேரா சுரக்ஷா காப்பீடு திட்டத்தை தென்னை வளர்ச்சி வாரியம் அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில், தென்னை மரம் ஏறுபவர்கள் மற்றும் பதநீர் இறக்குபவர்கள் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான கேரா சுரக்ஷா என்ற காப்பீடு இத்திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம். ஓரியண்டல் காப்பீடு நிறுவனம் மூலமாக இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இது விபத்து காப்பீடு பாலிசி. இதில் ஒரு லட்சம் ரூபாய் வரை மருத்துவக் கட்டணம் செலுத்திக் கொள்ளலாம்.
தென்னமர நண்பர்கள் பயிற்சி திட்டம் மற்றும் பதநீர் இறக்கும் கலைஞர்கள் பயிற்சித் திட்டம் ஆகியவற்றின் கீழ் அனைத்து பயிற்சியாளர்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் முதலாம் ஆண்டு பிரீமியம் தொகை 398.65 ரூபாயை தென்னை வளர்ச்சி வாரியம் ஏற்றுக்கொள்ளும். ஓராண்டு முடிந்த பிறகு பிரீமியம் தொகையில் 25 சதவீதமான 99 ரூபாய் செலுத்தி பாலிசியை பயனாளர்கள் புதுப்பித்துக் கொள்ளலாம். 18 வயது முதல் 65 வயது வரை உள்ள தென்னை மரம் ஏறும் தொழிலாளர்கள் இந்த காப்பீடு திட்டத்தில் இணைந்து பயன் பெறலாம்.
இதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வேளாண் அதிகாரி, பஞ்சாயத்து தலைவர் மற்றும் அலுவலக அதிகாரிகள், சிபிசி இயக்குனர்கள் கையெழுத்தைப் பெற்று கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் மாற்றும் வகையில் தொண்ணூற்று ஒன்பது ரூபாய் மதிப்புள்ள டிடியை தென்னை வளர்ச்சி வாரியத்தின் அனுப்பி இந்த காப்பீடு திட்டத்தில் பயன் பெறலாம். மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களை www.coconutboard.gov.in என்ற இணையதள பக்கத்தில் சென்று தெரிந்துகொள்ளலாம்.