தென்பெண்ணை ஆற்று வெள்ளத்தில் சிக்கி தவித்த வாலிபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதனால் திருக்கோவிலூர் பகுதி தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. இதன் காரணமாக ஆற்றில் இறங்கி குளிக்கவும் அல்லது செல்பி எடுக்கவும் பொதுமக்கள் யாரும் ஆற்று பகுதிக்கு செல்ல வேண்டாம் என ஒலிபெருக்கி மூலமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது. இந்த சூழலில் திருக்கோவிலூர் நகராட்சிக்குட்பட்ட வெள்ளை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ஏழுமலை மகன் மாணிக்கம் (20) என்பவர் வருவாய்த்துறையினரின் எச்சரிக்கையும் மீறி தென்பெண்ணை ஆற்றில் குளிக்க சென்றிருக்கின்றார்.
அப்போது ஆற்றில் தண்ணீர் வேகமாக சென்ற காரணத்தினால் ஆற்று வெள்ளத்தில் மாணிக்கம் அடித்து சொல்லப்பட்டுள்ளார். அதன் பின் அவர் திருக்கோவிலூர் மேம்பாலம் அருகே ஆற்று நடுவில் உள்ள மணல் திட்டத்தில் சிக்கிக் கொண்டு வெளியே வர முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார். இதை பார்த்த அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் திருக்கோவிலூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பேரில் திருக்கோவிலில் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆற்றின் நடுவே உள்ள மணல்மேட்டில் சிக்கிக் கொண்டிருந்த மாணிக்கத்தை கயிறு மூலமாக மீட்டுள்ளனர். அதன் பின் அவரை எச்சரிக்கை விடுத்து அனுப்பியுள்ளனர் இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.