தெற்கு ரயில்வே திருவனந்தபுரம் கோட்டம் சார்பில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பினை தடுப்பதற்காக முழு ஊரடங்கு நடைமுறைப் படுத்தப்பட்டு வந்தது. அப்போது பொது போக்குவரத்து கடுமையாக தடை செய்யப்பட்டு இருந்த நிலையில், மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். அதிலும் குறிப்பாக நீண்ட தூரம் பயணம் செய்யக்கூடிய பொதுமக்கள் ரயில் சேவை இல்லாமல், மிகுந்த கஷ்டப்பட்டனர். இதன்பின் கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து, அதிரடியாக ஊரடங்கு உத்தரவுகள் விலக்கிக் கொள்ளப்பட்டது.
இதனால் பொது போக்குவரத்து மீண்டும் இயங்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக நிறுத்தப்பட்ட அனைத்து ரயில் சேவைகளும் மக்களின் வசதிக்காக மீண்டும் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தெற்கு ரயில்வே, பண்டிகை கால சிறப்பு ரயில்கள் இயக்குவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனால் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது.
மேலும் தெற்கு ரயில்வே திருவனந்தபுரம் கோட்டம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது, ரயில் எண்: 06006 நாகர்கோவில் ஜங்ஷன் – தாம்பரம் சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில் நாகர்கோவிலில் இருந்து ஏப்ரல் 17ம் தேதி புறப்படுகிறது. இந்த சிறப்பு ரயில் தாம்பரத்திற்கு மறுநாள் காலை 4.10 மணிக்கு சென்றடையும். இந்நிலையில் இந்த சிறப்பு ரயில் திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை ஜங்ஷன், திண்டுக்கல், திருச்சி, விருதாச்சலம், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய இடங்களில் நின்று செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த ரயில்களில் ஒரு 2 அடுக்கு ஏசி, 2 மூன்றடுக்கு ஏசி, 13 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகள், இரண்டு இரண்டாம் வகுப்பு மாற்றுத்திறனாளி மற்றும் லக்கேஜ் கம் பிரேக் வேன் பெட்டிகள் இடம் பெற உள்ளன. இவ்வாறு தெற்கு ரயில்வே திருவனந்தபுரம் கோட்டம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை குறித்து ரயில் பயணிகள் கூறியுள்ளதாவது, தமிழகத்தில் பண்டிகை காலங்கள் நெருங்கி வரும் நிலையில், சென்னை முதல் கன்னியாகுமரி வரை ஆயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்வது வழக்கம். இதற்கு காரணம் விமான பயணத்தை அனைவரும் மேற்கொள்வது என்பது சாத்தியம் இல்லாத ஒன்று. அதே சமயம் பஸ் பயணம் என்பது நீண்ட தூர பயணத்துக்கு சரிபடாது. எனவே பஸ்சில் பயணம் செய்யும் போது பல்வேறு பிரச்சனைகளை பயணிகள் எதிர்கொள்ள வேண்டி இருக்கும். குறிப்பாக உணவு, இயற்கை உபாதை கழித்தல் போன்ற பிரச்சனைகள் உள்ளன. ஆனால் ரயில் பயணம் என்றால் எவ்வித பிரச்சனையும் இருக்காது என்பதால் ரயிலில் பயணம் செய்வதை தான் பெரும்பாலானோர் விரும்புகிறார்கள்.