வடகொரியா கடந்த ஐந்து வருடங்களில் முதன்முறையாக ஜப்பான் மீது கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ஏவுகணையை ஏவியுள்ளது. வடகொரியா பரிசோதித்த ஏவுகணை பசுபிக் பெருங்கடலில் விழுவதற்கு முன்பாக ஜப்பான் எல்லைக்கு மேலே பறந்து சென்றுள்ளது. இதனை தொடர்ந்து ஜப்பான் அரசு நாட்டு மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் 2017 ஆம் வருடத்திற்கு பின் ஜப்பானுக்கு மேல் பறந்த முதல் வடகொரிய ஏவுகணை இதுவாகும் இதற்கு பதிலடியாக அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா இன்று ஏவுகணை சோதனை மேற்கொண்டுள்ளது.
வடகொரியாவுக்கு பதிலடி தரும் விதமாக இந்த சோதனையில் அமெரிக்க ராணுவம் தங்களுக்கு சொந்தமான 4 ஏவுகணைகளை ஏவி சோதனை மேற்கொண்டுள்ளது. அதேசமயம் தென்கொரிய ராணுவமும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு ஏவுகணைகளை ஏவி சோதனை மேற்கொண்டுள்ளது. இந்த சூழலில் வடகொரியா இன்று அதிகாலை அணு ஆயுதத்தை சுமந்து செல்லும் வல்லமை கொண்ட பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை மேற்கொண்டுள்ளது. வடகொரியாவில் இருந்து ஏவப்பட்ட அந்த ஏவுகணை ஜப்பான் தென் கொரியாவை நோக்கி கிழக்கு கடற்கரை பகுதியில் வான் பரப்பை கடந்து சென்று பசிபிக் பெருங்கடலில் விழுந்துள்ளது இதனை தென்கொரிய கூட்டு ராணுவ படை உறுதி செய்து இருக்கிறது.