Categories
தேசிய செய்திகள்

தென் மாவட்டங்களுக்கு பண்டிகை கால சிறப்பு ரயில்கள்…. ரயில்வே நிர்வாகத்தின் அறிவிப்பு….!!!!

கர்நாடக மாநிலத்திலிருந்து பண்டிகை கால கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக தென் மாவட்டங் களுக்கு கூடுதல் ரயிலை இயக்குவதற்கு தென்மேற்கு ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி எஸ்வந்த்பூர் பகுதியில் இருந்து திருநெல்வேலிக்கும், மைசூரில் இருந்து தூத்துக்குடிக்கும் இடையே சிறப்பு ரயில்களை இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் எஸ்வந்த்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு அக்டோபர் 4 மற்றும் 11 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருக்கிறது. எஸ்வந்த்பூரில் இருந்து மதியம் 12:45 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் அதிகாலை 4:30 மணி அளவில் நெல்லையை வந்தடையும். அதன் பிறகு அக்டோபர் 5 மற்றும் 12 ஆகிய தினங்களில் திருநெல்வேலியில் இருந்து எஸ்வந்த்பூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

நெல்லையிலிருந்து காலை 10:40 மணியளவில் புறப்படும் ரயில் இரவு 11:30 மணி அளவில் எஸ்வந்த்பூரை சென்றடையும். இந்த சிறப்பு ரயில்கள் கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், ஓசூர், கார்மேலரம், பனஸ்வாடி போன்ற பகுதிகளில் நின்று செல்லும். இதனையடுத்து மைசூரில் இருந்து செப்டம்பர் 30-ஆம் தேதி மதியம் 12:05 மணி அளவில் புறப்படும் ரயில் மறுநாள் அதிகாலை 5 மணி அளவில் தூத்துக்குடியை சென்றடையும். அதன் பிறகு தூத்துக்குடியில் இருந்து அக்டோபர் 1-ம் தேதி‌ மாலை 3 மணி அளவில் புறப்படும் ரயில் மறுநாள் மதியம் 12:25 மணிக்கு மைசூரை சென்றடையும். இந்த ரயில்கள் கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, ஓசூர், பெங்களூர் காண்டோன்மென்ட், பெங்களூர், எலியூர் போன்ற பகுதிகளில் நின்று செல்லும்.

Categories

Tech |