வழக்கறிஞர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்திலுள்ள உடையார்பாளையம் தெற்கு தெருவில் வழக்கறிஞரான அறிவழகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அறிவழகன் தற்போது நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட இலக்கிய பிரபு என்பதற்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இதற்கு அறிவழகனின் உறவினர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அறிவழகன் தெருவில் நின்று கொண்டிருந்த போது ஆயுதங்களுடன் ஆட்டோவில் வந்த 4 பேர் அவரை கத்தியால் குத்தியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த அறிவழகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார்.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அறிவழகனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தேர்தல் முன் விரோதம் காரணமாக அறிவழகன் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய செந்தில்குமார் என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.