பிரிட்டனிலிருந்து தெலுங்கானா வந்த பயணிகளில் 279 பேர் தப்பி ஓடிவிட்டதாக அம் மாநில சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனா வின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்நிலையில் பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸால் உலக நாடுகள் அனைத்தும் அச்சமடைந்துள்ளனர். இதனையடுத்து பிரிட்டனிலிருந்து தெலுங்கானா வந்த 1216 பயணிகளில் 21 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், 279 பயணிகளை கண்டுபிடிக்க முடியவில்லை என்று தெலுங்கானா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் அதில் 184 பேர் தவறான முகவரியை கொடுத்து உள்ளனர். அதனால் விவரங்களை தெரிவிக்க 040-24651119, 9254170960 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என அறிவித்துள்ளது.