தமிழ் திரையுலகை பொறுத்தவரையிலும் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்குள் நுழைந்து வெற்றிகரமான கதாநாயகிகளாக மாறியவர்கள் சில பேர் மட்டும்தான். அந்த அடிப்படையில் சேனல் ஒன்றில் தொகுப்பாளராக இருந்து சீரியலில் நடித்து பின், சினிமாவுக்கு வந்தவர்தான் நடிகை பிரியா பவானி சங்கர். அதன்படி இவர் மேயாதமான் மற்றும் கார்த்தியுடன் இணைந்து நடித்த கடைக்குட்டி சிங்கம் போன்ற படங்கள் வாயிலாக பிரபலமடைந்தார். மேலும் இவர் கதாநாயகியாக நடித்த மான்ஸ்டர், ஓ மணப்பெண்ணே போன்ற திரைப்படங்கள் வெற்றி பெற்றது. இதையடுத்து இப்போது அவர் தமிழில் பல்வேறு படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது முதல் முதலாக தெலுங்கு திரையுலகிலும் பிரியா பவானி சங்கர் அடியெடுத்து வைத்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பை பிரியா பவானி சங்கர் இருக்கும் போஸ்டருடன் வெளியிட்டு படக் குழுவினர் உறுதிப்படுத்தி இருக்கின்றனர். ஈஸ்வர் கார்த்திக் என்பவர் இயக்கும் இப்படத்தில் சத்யதேவ் மற்றும் டாலி தனஞ்செயா இருவரும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். இவர்கள் இருவருக்குமே இது 26-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தில் பிரியா பவானி சங்கர் தவிர இன்னும் 2 கதாநாயகிகள் இருப்பதாக கூறப்படுகிறது.