கொடிமரம் அமைப்பதற்காக வழங்கிய தேக்கு மரம் 4 ஆண்டுகளாக வீணாக கிடப்பதால் பக்தர்கள் வேதனையில் உள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தோப்புத்துறையில் அபிஷ்ட வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் ராமாயணம் காலத்திற்கு முன்பே இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கோவிலில் உள்ள திருமாலை ராமர் இலங்கைக்கு செல்வதற்கு முன்பு வழிபட்டதாகவும், கோவிலின் முகப்பில் அவர் பெயரால் ஒரு தீர்த்தம் அமைத்ததாகவும் கூறப்படுகிறது. கடந்த 25 ஆம் ஆண்டு கோவிலில் குடமுழுக்கு விழா நடைபெற்ற போது கொடிமரம் பழுதடைந்தது. இதனால் பக்தர் ஒருவர் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள தேக்கு மரத்தை கொடிமரம் அமைப்பதற்காக வாங்கி கொடுத்தார்.
சுமார் 4 ஆண்டுகள் ஆகியும் அங்கு கொடிமரம் அமைக்கப்படவில்லை. மேலும் மழை, வெயிலில் கிடந்து மரம் வீணாகும் நிலையில் இருக்கிறது. அறநிலையத் துறையினர் அனுமதி அளிக்காததால் கொடிமரம் அமைக்கும் பணி பாதிக்கப்படுகிறது. பக்தர் காணிக்கையாக அளித்த மரத்தில் கொடிமரம் அமைக்க தாமதமாவதால் பக்தர்கள் வேதனையில் உள்ளனர். எனவே அறநிலைத்துறையினர் கொடிமரம் அமைக்க அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.