கன்னியாகுமரி மாவட்டம் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் தூத்தூர் மற்றும் இணையம் மண்டலங்களிலுள்ள 18 மீனவ கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் மீன்பிடி தொழிலில் செய்து வருகின்றனர். இத்துறைமுகத்தின் முகத்துவார பகுதியில் அடிக்கடி படகு கவிழ்ந்து மீனவர்கள் இறந்துவரும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இதில் துறைமுகத்தின் முகத்துவாரம் அமைக்கப்பட்ட கட்டமைப்பிலுள்ள கோளாறு காரணமாகத்தான் இந்த விபத்து நேரிடுவதாக மீனவர்கள் குற்றம்சாட்டி வந்தனர். இந்நிலையில் சென்ற 11ஆம் தேதி பூத்துறை பகுதியில் வசித்துவந்த சைமன் என்ற மீனவர் துறைமுக நுழைவாயில் அருகே படகு கவிழ்ந்து இறந்தார். இதையடுத்து மீனவர்களின் போராட்டம் தீவிரமடைந்தது.
இப்போது துறைமுக நுழைவுவாயிலிலுள்ள மணல் திட்டுகளை அகற்றாமல் மீன் பிடிக்க கடலுக்குள் செல்வதில்லை என முடிவெடுத்தபடி சென்ற சில நாட்களாக மீனவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். இதனிடையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு மணல் அள்ளும் எந்திரம் கொண்டுவரப்பட்டு அலை தடுப்புச்சுவர் பகுதிகளில் பணிகள் தொடங்கப்பட்டது. எனினும் இந்த பணிகளால் எவ்வித பலனும் இல்லை என்று மீனவர்கள் குற்றம்சாட்டியதோடு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மீனவர் கூட்டமைப்பு சார்பாக நடைபெற்றது. இந்நிலையில் நேற்று மாலை துறைமுக அலுவலகத்தில் மீனவ பிரதிபிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் கூட்டம் நடந்தது.
அப்போது கூட்டத்தில் மாவட்ட மீன்வளத்துறை இயக்குனர் காசிநாத பாண்டியன், இணை இயக்குனர் விஜில் கிராஸ், தூத்தூர் மற்றும் இணையம் மண்டல மீனவ சங்க கூட்டமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தையில் 15 தினங்களில் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு மீனவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என உறுதியளித்தனர். அதனை தொடர்ந்து நாளை முதல் வழக்கம்போல துறைமுகம் இயங்கும் என்று மீனவர் கூட்டமைப்பு சார்பாக தெரிவிக்கப்பட்டது. அத்துடன் அதிகாரிகள் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் சீரமைப்பு பணிகள் நடைபெறாத பட்சத்தில் அடுத்த கட்டமாக அரசின் கவனத்தில் கொண்டு செல்ல மிகப் பெரிய போராட்டம் நடைபெறும் எனவும் மீனவர்கள் தரப்பில் கூறப்பட்டது.