தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு முக்கியமான பண்டிகைகளை கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் ஆடி மாதத்திற்கு என்று சிறப்பு உண்டு. அதாவது ஆடிபெருக்கு மிகவும் உற்சாகமாக கொண்டாடப்படுவதும், ஆடி அமாவாசை தினத்தில் மூதாதையரை நினைத்து திதி தர்ப்பணங்கள் செய்வதும் பல ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிகழ்வாகும். அதனைபோல ஆடி 1 ஆம் தேதி தேங்காய் சுடும் பண்டிகை ஈரோட்டில் ஆண்டுதோறும் உற்சாகமாகும் கொண்டாடப்படும். மேலும் ஆடி 1ஆம் தேதி மாலையில் பெண்கள் தங்கள் வீடுகளின் முன்பு நெருப்பு பற்ற வைத்து தேங்காய் சுடுவார்கள். தேங்காய் சுடுவதற்கு முன்பாக அதை இளங்காயாக தேர்ந்தெடுத்து தயார் செய்வார்கள். தேங்காயின் ஒரு கண்ணை உடைத்து தண்ணீரை வெளியே எடுத்துவிட்டு, அதன் உள்ளே வெள்ளம், பருப்பு, அவல், பச்சரிசி போட்டு கண் வழியாக தேங்காய் சுடுவதற்கான குச்சியை பொருத்தி தீயில் சுட்டு எடுப்பார்கள்.
அதன் பிறகு தேங்காய் சுடப்பட்டு நன்கு வெந்ததும் தேங்காய் ஓட்டை உடைத்து சாமிக்கு படையல் போட்டு பூஜை செய்து அனைவரும் பகிர்ந்து சாப்பிடுவார்கள். இதனையடுத்து மகாபாரதப் போர் ஆடி மாதம் 1ஆம் தேதி தொடங்கி 18 ஆம் தேதி முடிந்ததாக கூறப்படுகிறது. பாரதப்போர் தொடங்கிய ஆடி மாதம் முதல் நாள் பாண்டவர்கள் போரில் வெற்றி பெற வேண்டும் என்று பொதுமக்கள் ஆடி 1ம் தேதி தேங்காய் சுட்டு சாமிக்கு படைத்து பூஜை செய்ததை நினைவு கூறக்கூடிய வகையில் இந்நிகழ்ச்சி தொடர்ந்து நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் ஈரோட்டில் இந்த பண்டிகை பொதுமக்கள் உற்சாகமாக மகிழ்ச்சியாக கொண்டாடப்படுகிறது. இதற்காக தேங்காய் சுடும் குச்சிகள் ஈரோட்டில் பல்வேறு பகுதிகளிலும் விற்பனை செய்யப்படுகிறது.