Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தேங்காய் நார் தொழிற்சாலையில் தீ விபத்து… லாரிகள், எந்திரங்கள் பற்றி எரிந்தது… மொத்தம் ரூ 65 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசம்..!!

மரக்காணம் அருகில் தேங்காய் நார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு லாரிகள், எந்திரங்கள் அனைத்தும் எரிந்து நாசமாகின.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகில் மண்டவாய் கிராமத்தில் வசித்து வருபவர் கோவிந்தராஜ் (49) இவருடைய வீட்டின் அருகில் தேங்காய் நாரிலிருந்து பஞ்சு தயாரிக்கும் தொழிற்சாலையை நடத்தி வருகின்றார். இந்த தொழிற்சாலையில் 20-க்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 4.30 மணி அளவில் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக தொழிற்சாலைக்கு அருகில் உள்ள மின்மாற்றியிலிருந்து  தீப்பொறிகள் சிதறியது.

அந்தத் தீப்பொறிகள் தொழிற்சாலையில் குவித்து  வைத்திருந்த தேங்காய் நார் மீது விழுந்து  தீப்பற்றி எரிந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் தீயை அணைக்க முயன்ற போது காற்று வேகமாக வீசியதால் தீ மளமளவென பரவியது. தொழிலாளர்கள் உயிர் பிழைத்தால் போதும் என்று அங்கிருந்து தப்பி ஓடினார்கள். சிறிது நேரத்திற்குள் தொழிற்சாலை முழுவதும் தீ பரவி அங்கு நின்று கொண்டிருந்த இரண்டு லாரிகள், ஒரு மினி டெம்போ, தேங்காய் பஞ்சு உற்பத்தி செய்யும் இயந்திரங்கள் எல்லாம் எரிந்து நாசமாகின.

இந்த விபத்து குறித்து மரக்காணம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. இத்தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து நீண்ட நேரம் போராடி தீயை முற்றிலும் அணைத்தார்கள். இந்த தீ விபத்தில் இயந்திரங்கள், தேங்காய் நார், வாகனங்கள் என சுமார் 65 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகி உள்ளன. இதுகுறித்து மரக்காணம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |