தஞ்சையில் தேங்காய் பறிக்க சென்ற நபர் போதையில் தென்னை மரத்தின் மேல் மூன்றரை மணி நேரம் உறங்கிய சம்பவம்
தஞ்சை மாவட்டம் வேலூரை சேர்ந்த லோகநாதன்(40) என்பவர் தென்னை மரம் ஏறுவதை தொழிலாக கொண்டவர். அவர் நேற்று காலை 9 மணிக்கு கரந்தை ஜெயின மூப்ப தெரு பகுதியில் தமிழரசன் என்பவரின் தென்னை மரங்களில் தேங்காய் பறிக்க சென்றிருந்தார்.இரண்டு மரங்களில் தேங்காய்களை பறித்து பின்னர் லோகநாதன் மிகவும் சோர்வாகினார். சோர்வைப் பொருட்படுத்தாமல் மூன்றாவது தென்னை மரத்தில் ஏறினார். 50 அடி உயரம் கொண்ட அந்த தென்னை மரத்தின் மேல் ஏறி அதன் மட்டையின் மேல் அமர்ந்தார்.
அதன் பிறகு அவரால் தேங்காயை கீழே பறித்துப் போட முடியவில்லை. அவர் அங்கு இரு மட்டைகளுக்கு இடையே அமர்ந்து கொண்டு கைகளாலும் பிடித்துக்கொண்டு தலையை மற்றொரு மட்டையில் சாய்த்துக்கொண்டு தூங்கி விட்டார். நீண்ட நேரமாகியும் தென்னை மரத்தின் கீழ் தேங்காய் இல்லாததை பார்த்த அக்கம்பக்கத்தினர் தென்னை மரங்கள் அருகே சென்றனர். அப்போது அங்கு லோகநாதனை காணவில்லை என்று அனைவரும் தேடினர். அப்போது அங்கு அவர் தென்னங் கொலைகளுக்கு மேலே இருந்த மட்டையில் சுருண்டு படுத்து உறங்கியது தெரியவந்தது.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் சத்தம்போட்டு அவரை எழுப்ப முயற்சித்தனர். ஆனால் அவர் எவ்வித அசைவுமின்றி படுத்துக் கொண்டிருந்தார். நீண்ட நேரமாகியும் அவர் எழுந்திருக்கவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். அனைவரும் சத்தம் போட்டு எழுப்பியும் அவர் எழவில்லை.இதனால் அவருக்கு ஏதாவது ஆகி இருக்குமோ என்று பயந்து அப்பகுதி மக்கள், போலீசாருக்கும் தீயணைப்பு வீரர்களும் தகவல் அளித்தனர். அதன் பிறகு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பேட்டரி மைக் மூலம் ஒலி எழுப்பி லோகநாதனை கீழே வர அழைத்தனர். இதிலும் லோகநாதன் இடம் இருந்து எந்த பதிலும் வராததால் இரும்பு ஏணி வைத்து தீயணைப்பு வீரர் ஒருவர் தென்னை மரத்தில் ஏறினார்.
நீண்ட கயிறை வைத்து அவரைக் கீழே இறக்கி விடலாம் என்று அவர் கயிறு ஒன்றை எடுத்து சென்றார். அப்போது அவருக்கு லோகநாதனின் முனங்கள் சத்தம் கேட்டது.லோகநாதன் தூக்கத்தில் இருப்பதை கண்டுகொண்டார். அதனால் சத்தமாக லோகநாதனின் பெயரை கூறி அவரை எழுப்ப முயற்சித்தார். திடீரென கண்விழித்த அவர் மேலே இருந்து சுற்றிப் பார்த்துவிட்டு மீண்டும் உறங்க முயற்சித்தார். உடனே தீயணைப்பு வீரரும் கீழிருந்த மக்களும் அவரை எழுப்ப லோகநாதனை அழைத்தனர்.இதைக் கேட்ட அவர் திடீரென எழுந்து கீழே இருந்த அனைவரையும் பார்த்து பின் தென்னை மட்டையை பிடித்து கீழே இறங்க முயற்சித்தார். தீயணைப்பு வீரர் அவரை ஏணி மூலம் கீழே இறங்கி வர கூறினார். லோகநாதன் மரத்தின் வழியாகவே தன்னால் இறங்க முடியும் என்று மரத்தின் உச்சியில் இருந்து கீழே இறங்கி வந்தார்.
பாதி மரம் இறங்கி வந்தவுடன் கீழிருக்கும் பொதுமக்களை கண்டு இவர்கள் எதற்காக இங்கு கூடி இருக்கிறார்கள் என்று புரியாமல் தலையை சொறிந்தபடி பாதி மரத்திலேயே அமர்ந்தார்.போலீசாரும் தீயணைப்பு வீரர்களும் லோகநாதனை மெதுவாக கீழே இறங்கு என்று கூறினர். ஆனால் பொதுமக்கள் எதற்காக கூடி நிற்கிறார்கள் என்று தெரியாமல் சிரித்துக் கொண்டே அவர் கீழே இறங்கினார்.மூன்றரை மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு அவர் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் கீழே இறங்கினார். அதனைக் கண்ட அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.பின்பு போலீசார் லோகநாதனை விசாரித்த போது தேங்காய் பறிக்க சென்ற போது சோர்வில் உறங்கி விட்டதாக பதில் கூறினார்.
இதனைத் தொடர்ந்து அவரை போலீஸ் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.அங்கு அவர் போதையில் இருந்ததால் இப்படி உறங்கிவிட்டேன் எனவும் இனி இப்படி செய்ய மாட்டேன் எனவும் கூறியுள்ளார்.எழுத்து மூலம் அவர் எழுதிக்கொடுத்தத்தபின் எப்படி இனி செய்யக்கூடாது என்று எச்சரித்து அவரை அனுப்பிவைத்தனர்.லோகநாதன் மரத்தில் தூங்குவதை கண்ட அவரது சொந்த ஊரைச் சேர்ந்த சிலர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.அங்கு அவர்கள் லோகநாதனுக்கு எப்பொழுதுமே இதே வேலை தான் இதுபோன்று ஏற்கனவே இரண்டு முறை தென்னை மரங்களுக்கு மேல்படுத்து உறங்கினான் என்று கூறியுள்ளனர்.